வெள்ளைக் கோபுரம்- ஒரு வரலாற்றுப் பார்வை
திருச்சி : வரலாற்று சிறப்புமிக்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் "பூலோக வைகுண்டம்' என, பக்தர்களால் போற்றி வணங்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பிரசித்தி பெற்ற முக்கிய அடையாளங்களில் ஒன்று, "வெள்ளை கோபுரம்' எனப்படும் கிழக்கு கோபுரம்.
கி.பி., 1450 காலக்கட்டத்தில், விஜயநகர பேரரசரான அச்சுத தேவராய நாயக்கர் காலத்தில், அகோபில மடத்தின் ஸ்தாபகர் மற்றும் முதல் ஜீயர் ஆதிபன் சடகோபனால், வெள்ளை கோபுரம் கட்டப்பட்டது.
இதேபோல, வடக்கு சித்திரை வீதி கோபுரம், தெற்கு ராஜகோபுரம், மடத்தால் கட்டப்பட்டது.
ஒன்பது நிலைகளுடன் கட்டப்பட்ட வெள்ளை கோபுரம், 1987 வரை, ஸ்ரீரங்கத்தின் ராஜகோபுரமாக விளங்கியது.
அதன்பின்னரே, தெற்குப்பகுதியில் மொட்டையாக இருந்த கோபுரம், ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக்கும் நோக்கில், 234 அடியில் ராஜகோபுரமாக எழுப்பப்பட்டது.
தியாக வரலாறு: சைவ சமயத்தின் மீது பற்றுக்கொண்ட, சோழமண்டல அரசனான கோனேரிராயன், ஸ்ரீரங்கம் கோவில் சொத்துகளை பறித்து, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு கொடுக்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, கி.பி., 1489ல், இரண்டு ஜீயர்கள் மற்றும் பெரியாழ்வார் எனப்படும் ஒருவர் என, மூன்று பேர், வெள்ளை கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர்.
தகவலறிந்த, விஜயநகர அரசன் நரசநாயக்கன், கோனேரிராயனை போரிட்டு வென்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொத்துகளை மீட்டுக் கொடுத்தார். உயிரிழந்த மூவருக்கும், வெள்ளை கோபுரத்தில் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஒரு தாசியின் கதை: இதேபோல, கடந்த, 15ம் நூற்றாண்டின் இறுதியில், மதுரை சுல்தான்கள், கோவிலை கைப்பற்றி, அவர்களின் தளபதியை ஸ்ரீரங்கத்தில் தங்கவைத்து, பக்தர்களை வழிபாடு செய்யாமல் தடுத்தனர். இதனால் வேதனையடைந்த கோவிலின் தாசி ஒருவர், சுல்தானின் தளபதியை மயக்கி, தன்வசப்படுத்தினார். அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச்சென்று அவரை கட்டிப்பிடித்தபடியே கீழே குதித்தார்.
ரங்கநாதருக்காக உயிரிழந்த தாசியின் வம்சாவழியினர் இறந்தால், அரங்கனின் வஸ்திரம், மாலை, சமையற்கட்டில் இருந்து வாய்க்கரிசி, ஈமச்சடங்குகாக நெருப்பு கொடுப்பது, இன்று வரை வழக்கமாக உள்ளது. சுல்தானின் தளபதி இறப்புக்குபின், பக்தர்கள் கோவிலுக்கு சகஜமாக செல்லும் நிலை ஏற்பட்டது. உலகிலேயே கோவில் நடைமுறைகள் குறித்து எழுதப்பட்ட நூலான, "கோவில் ஒழுகு' என்ற நூலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஇராமானுஜர் அரங்கன் கோவிலிலேயே தங்கி திருக்கோவில் பூஜா விதிகளை வகுத்தார் ! அதன்படியே இப்போதும்,அரங்கனுக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன .
திருவரங்கம் திருக்கோவிலில் எம்பெருமானார் ஸ்ரீஇராமானுஜர் அமர்ந்த இடம்,தற்போது ’’ உடையவர் சந்நிதி’’ என்று வணங்கப்படுகிறது.
சில நூல்களில்1356கி.பி.என்று உள்ளது!
ReplyDelete