Wednesday, 26 June 2019

எண்ணம்

எண்ணம் !


மன்னவன் மயங்குதற்கே மல்லிகை மலர்ச்சரங்கள் !தலையேறும், மண்ணில் பிடித்து வைத்த பிள்ளையாரென,எம் மன்னவனும் மண்டியிட வேண்டுமென் முன்னாலே ? இம் மண்ணில் மங்கையென் போல் எவளுமில்லையெனும் எண்ணம் ! கொண்டவனும், கொடுத்தவனும், தந்த பொன்னெனக்குப் போதவில்லை, கண்டவளும், எனக்கடுத்தவளும், அணிந்த பொன்போல் வேண்டுமடா ? அண்டவரும் , அடுத்தவரும், அடுப்படியே, பின்வாசல், கதவருகேயிருக்க, கொண்டுவந்த பொருளெல்லாம் எந்தனுக்கே யெனும் எண்ணம் ! தலைவாசல் படியருகே இடித்த தலைகண்டு நகைத்ததெல்லாம், மலைவாசத் தலம் சுற்றி வருகையிலே மறக்குமென்றால், இலைவாசச் சோறூட்டி, இடுப்புத் துணி நெகிழ்த்தி இதயக் கதவருகே முலைவாசங் காட்டுகையில் , மயங்கித்தான் கிடந்திடுவானெனும் எண்ணம் ! கொண்டவளை என் செய்ய ? கொள்ள முடியலையே ? தன் எண்ணமெலாம், விண்டவளை என் செய்ய ? கொல்லவும் முடியலையே ?என் எண்ணமெலாம், கண்டவளை என் செய்ய ? எந்தையின் தங்கை மகள் என்பதனால், மனைவந்த, பண்டவளை என் செய்ய ? ஏற்றதொரு எண்ணமதை எண்ணிச் சொல்வீரோ ?

சீக்காளி

சீக்காளி

பெத்தும் கொடுக்கவில்லைத் தாய்ப்பாலை பொறந்த பிள்ளை அழுகிறது ? பசியாலே,,, பொத்திக் காக்கின்றாள் ! , தன்னழகைச் சீராக,, பொறந்த பிள்ளை பின்னாளில் ஆகின்றான்? சீக்காளி ! செத்தும் கொடுத்த, சீதக்காதிப் பிறப்பானென்று, கெத்துக் காட்டிவந்த, சீதப்பால்ப் பிறந்தபிள்ளை பொத்திக் காத்து வச்ச சீர்க்காரிப் பெற்ற பிள்ளை, கொத்தி இருமுகிறான் ? சீக்காளி ஆனதனால்,,,, வீட்டுக் காவலுக்கு செல்லமாய் வளர்க்கும் நாய்கூட தொட்டுத் தாவுகின்ற செல்லகுட்டிக்கு வார்க்கிறது, தாய்ப்பாலை வீட்டுக்கும், நாட்டுக்கும், செல்வமென பிறந்த பிள்ளையதோ? தொட்டாற் சிணுங்கியென சீக்காளிக் குரங்காகி நிற்கிறது. முந்தி சரிந்தபடி, முன்னூறு நாள் சுமந்தபடி பெத்தவனை முந்தானைச் சரித்தபடி, முகம் மட்டும் திறந்தபடி, பொன்னான முத்தமொன்று சிரித்தபடி, முகங்காட்டிச், சீர்மல்கும் தாய்ப்பாலை, சத்தமின்றி கொடுத்திருந்தால், ஆகியிருக்க மாட்டானே ? சீக்காளி !

தொலை நோக்கு

தொலை நோக்கு -
ஒற்றை வில்லுண்டு கையில், நூற்றைந்து பேருக்கும், கற்றை அம்பில்லை பையில், நாற்றுப்புல் கொண்டு, அற்றை திங்களில் வையலில், வந்த துரோணகுரு, மற்றை ஒருவித்தை கற்க, மாமரக் கிளித்தலை தெரிகிறதா என்க, மற்றை மக்கள் எல்லாம், மரம் கிளை, இலை, தெரியுதென்க, குற்றை குணம் கொண்டு குரு தகிக்க, குந்தியவள் மூன்றாம் மகன், சற்றேவிழிசுருக்கி,கிளித்தலை வரிமட்டும் தெரியுதென்க, கற்றே விட்டான் !"தொலை நோக்கு " என்றே குரு மகிழ்ந்த கதை அறிவீரா?

Wednesday, 19 June 2019

செப்பறைச் சாமி

அவனுக்குப் பசித்தது,,,
அவனுடன்,
நடந்தவனுக்கும் பசித்தது,,,

அவர்களுக்கு முன்னால்,,
நடந்து கொண்டிருந்தவருக்கும் பசிக்கிறது,,போல
அவர்களுக்குப் பசித்தது,,,,,,,,,,,

அவரைப் பாத்தா,,, ஊருக்குப் புதுசு போலத்தான் இருக்கு,,,,? என்னன்னுதான் கேப்போம்,,,, எந்த ஊருவே ? பதில் சொல்லாமல்,,, அவர் நடந்து கொண்டிருந்தார்,,, கொஞ்சம்,, தள்ளாடியபடி,,, கொஞ்சம் விந்தியபடி,,,,, லே மக்கா ! அவந்தான் மப்புல போறான் போல இருக்குலே,, அட,,அது ஒன்னுமில்லைலே,, பசி மயக்கமாட்டும் இருக்கலாமில்லே,,, பாத்தா பாவமாட்டும் ? இருக்கு வே,,, ஒம்மைத்தான் வே,,, கூப்புடுதம் இல்ல,, ஏன்னு கேக்குறது,,,, நடந்தவர்,, மெல்லத்திரும்பிப் பார்க்கிறார்,,, ஒங்களுக்கு என்னலே வேணும்,,, ஹேய்,,,அடப் பாத்தீயாலே,,, பெருசு,,நம்மூர் போலத்தான் இருக்கு,,,? நம்மூர்ல யாரு வீட்டுக்குப் போகுதிய,,, கூத்தன் விட்டுக்குத்தான்,,,, கூத்தனா ? அட,,யாரைச் சொல்லுதீய,, ஓ,,அந்த பாவக்கூத்து நடத்துவாரே,, அந்த பாட்டா வீட்டுக்கா ? மெல்லத் தலையாட்டிய படியே,,, நடந்தார்,, ஆமாம்,,? அவர் தலையாட்டினாரா ? அந்த பாட்டா,,செத்து ஏழெட்டு வருசமாச்சே,,,? அவரில்லை,,, ஓ,, அந்த கணியாங் கூத்து,,, அதான்.. ஆம்பளையே,,,பொம்ப்ளை மாதிரி வேசங்கட்டி மையானங் கோவில்ல ஆடுவாகளே,,அந்த அண்ணாச்சி வீட்டுக்கா,,,? அவன் மெல்லத் திரும்ப,,,, அந்த கூத்தாடுகிற அண்ணாச்சி ஒசரவிளை கோயில்ல கொடைன்னுட்டு, படை பட்டாளத்தோட,,, நேத்து தான போனாரு,,, ஏன்,, ஒங்கூரு கோயில்ல,, கணியாங்கூத்து நடக்காதா ? அதெல்லாம்,,,நாங்க பொறக்கதுக்கு முன்னால நடந்துச்சு,,இப்ப,,,, ஆர்கெஸ்ட்ரா,,, இல்லைன்னா,,விசய் டிவி காரனைக் கூட்டிட்டு வந்து நிகழ்ச்சிநடத்துவோம்,,, அப்படின்னா,, உங்கூர்ல,,உள்ளூர்காரனுக்கு மதிப்பு இல்லே,,அப்டித்தான,,,,,


ம்ம்,,,
எங்களின் பதிலில் சத்தமே வரலை,,,, ஆமா,,, இது ராசவல்லிபுரத்துக்கு போற பாதைதானே,,,, ? ஆமா,, அதாஞ் சொல்லிட்டமுல்லா,,,, நீங்க தேடி வந்த கூத்தர் ஊரில இல்லேன்னுட்டு,,,, அப்படியெல்லாம்,, சொல்லப்பிடாது,,, அவன்,, அங்கதான் இருக்கான்,,

உள்ளூர்காரன்,,
நாங்க சொல்லுதோம்,,,
எங்களுக்குத் தெரியாம எவன்வே,,,?,,,கூத்தன்,,,,,,,,,,


லே,,மக்கா,,
பொறுலே,,,,,,,,,,,,,
நம்மூர்லே,,,நாம கூப்பிடுகதுக்கு ஒரு பேரு,,,
பள்ளியோடத்துல ஒரு பேருன்னு வச்சிருப்பாவல்லா,,,, அப்படி யாராவது இருக்கும்,, எதுக்கும்,,இன்னும் கொஞ்சம் பொறுமையா,,கேளுடே,,,

இவ்வளவு பேசுகோம்,,,,
ஆனாலும்,,,
அவரும்,,
நடக்குறதை நிப்பாட்டல்ல,,,,,,,
நாமளும்,,, கிறுக்கனாட்டம்,,இவரு பின்னாலேயே நடந்துட்டு இருக்கோம்,,,,


முன்னால,,நடந்து கொண்டிருந்தவர்,,
திடீரென நின்றார்,,,
முகத்தில் புன்னகை,,,,
கை கூப்பினார்,,,,! மெல்லச் சிரித்தார்,,,

பெரிசு சிரிக்குதாரு,,
யாரைப் பாத்து வே சிரிக்கேறு,,,

அவர்,,
கை நீட்டினார்,,
எவரேனும்,,வருகிறார்களா ?
இல்லை,,

இல்லவே இல்லை,,
இந்த வெயிலில்,,,
சுட்டெரிக்கிற,,இந்த வெயிலில்,,,
எவர் வருவார்,,வெளியே,,,?
ஒருத்தனையும்,,காணோம்,,,ஆனா,,,
நேரில,,ஆளைப் பாத்த மாதிரியே,,கும்புடுதாரே,,,,


ஏதும்,,புரியவில்லை,,எங்களுக்கு,,,?
கை கூப்பிக் கொண்டிருந்த பெருசு,,
வெயிலில்,,பொத்தென்று,,சாலையில்,,,,சரிந்தார்,,,

போன மாசத்துல போட்ட,,தார் ரோடு,,,!
வெயிலில்,,
தகித்த தார் ரோடு,,,
அங்கங்கே,,
தார் இளகி,,,கானல் நீர் காட்டிக் கொண்டிருந்த தார் ரோடு,,,
சரிந்து கிடந்த,,அவரின் உடல்,,,மெல்லத் துடித்தது,,,

லே மக்கா,,
தூக்குல,,,

மெல்லலே,,மெல்ல,,,
பாத்துப் புடி,,,
அந்த பனை மர நெழலுக்குக் கொண்டு போயிருவோம்,,,

மூச்சுத் திணறிற்று,,,
கனத்த நீண்ட உடல்,,,
நாங்க இளவட்டமுல்லா,,,,,,,,,,,
நேத்து,,, குமராண்டி போத்தி,,
எங்களப் பாத்து சிரித்தபடி கொமைச்சது,,இப்ப தெரியுது,,,

லே,,மக்கா,,,
முகத்துல,,தண்ணி தெளிக்கலாமா ?

தண்ணிக்கு,,எங்க போவ,,,?

குடிக்க ஏதாச்சும் கொடுக்கலாமா ?

எதைக் கொடுப்ப,,,?

லே மக்கா,,, பெருசுக்கு லோ சுகரு இருக்குமோ ?

வந்துட்டான்,,போலே,,
இவம் பெரிய டாக்டரு,,,,,

அதில்ல மக்கா,,வாட்சாப்ல படிச்சேன்,,,,

நீ,,
வாட்சாப்ல,,படிச்ச,,,
நம்பிட்டோம்,, லே,,ஆகுறதைப் பாருலே,,
நானே பர்தவிச்சுட்டு இருக்கேன்

இங்க பாரேன்,,,வாட்சாப்ல,,,
படி,,

ம்ம்,,,
ஆமாம்,,,
அப்படின்னா,,முதல்ல,,,
அவருக்கு இனிப்பா,,ஏதாவது கொடுக்கணும்,,,
இந்த
கல்கோனா முட்டாசியைக் கொடுப்பமா ?

லே,,நீ
கிறுக்கனாலே,,,நீ,,
மூணு முட்டாசி வாங்கிணோம்,,,
ஆளுக்கொன்னு தின்னுட்டு,,இந்த ஒன்னை பங்கு வைக்க ஒடைக்க முடியாமத்தானே,,
பாக்கெட்டுல போட்டிருக்க,,,
இதைக் கொடுத்து,,அது கரைஞ்சு,,,
அது்க்குள்ள,,அவரு பரதேசம் போயிருவாரு,,,

இப்ப என்ன செய்யலாம்,,,
செனம்,,ஒரு முடிவெடு,, என்று சொல்லிய போது,,,
இந்த வறட்சியிலும்,,காயாம,,பனை மரங்கள் காற்றிலாடியது,,,
லே இவனே,,
பனையில கலயம் கட்டியிருக்குலே,,,

ஒடினான்,,,
மெல்ல,,பனை மரத்தைத் தொட்டுக் கும்பிட்டான்,,,
பனையை,,மெல்லக் கட்டி பிடித்தான்,,,

சரசரவென்று பனையேற ஆரம்பித்தான்,,,
கீழே பாத்தா,,கால் நடுக்கம் அதிகமாகும்,,
இதுக்கு முன்னால பனை ஏறியதில்லை,,,
ஏதோ ஒரு வேகத்துல,,பனை ஏற ஆரம்பிச்சாச்சு,,,
முன் வச்ச கால பின் வக்க கூடாதுள்ளா,,,,

லே,,பாத்துலே,,,
பாத்துல,,

கீழிருந்து,,,கத்துகிறான்,,,
பெரிசிடம்,,அசைவில்லை,,,

பெரியவரைப் பாக்க தோணுது,,
வேண்டாம்,,
முதல்ல கலயத்தை கீழ இறக்குவோம்,,இப்பத்தைக்கி,,இந்த பயினியை விட்டா,,வேற நாதியில்ல,,,

சாமி,புள்ளாயாரப்பா,,,காப்பாத்துப்பா,,,
உச்சிக்கு வந்தாச்சு,,,
கலயத்தை மெல்ல அவுத்தாச்சு,,,
எப்படிக் கீழ,,
சிந்தாம கொண்டு போறது,,,,
அதும்ம்
கலயத்துல,,பாதி கூட பயினி இல்ல,,,
பனைக்க ஒடமஸ்தக்காரன் பாத்தா,,இன்னிக்கு நாம் காலி,,தான்,,,
அதெல்லாம்,,,அப்புறம் பாத்துக்குவம்,,
இப்ப,,என்ன செய்ய,,,
எப்படியாவது பயினி கலயத்தைக் கீழக் கொண்டு போயாகனும்,,,,,,

பனை வாரியை,,இறுகப் பிடித்தபடி,,, முதுகுத் தோளில்,,
கலயத்தைக் கட்டியபடி,,, இறங்க எத்தனிக்கையில்,,
தூரத்தே,,,,
கோபுரம்,,,!
செப்பறை சாமி கோவில் கோபுரம்,,,
ஆஹா,,
சாமிக்க பேரு,,,
கூத்தன்னுல்லா,,,
அதுவும்,,அழகிய கூத்தன் அல்லவா ?


செப்பறை சாமி,,காப்பாத்துப்பா,,,,
கண்ணில் நீர் திரண்டது,,,

இறங்கையில,,,வேகமா,,இறங்கி,,,

பனை மூட்டுக்கு கிட்ட வரயில,,,

பாத்து மக்கா,,,பாத்து,,,

லே,,,பயினின்னா,,சுண்ணாம்பு சேர்மானம் பண்ணனுமில்லா,,,இலாட்டா,,கள்ளுல்லா,,,
ஏற்கெனவே,,
பெருசு மயக்கத்துல,,இருக்கு,,,

லே,,,
அதெல்லாம்,,ஒன்னும் இல்ல,,
நீ வேற,, இனிக்கத்தான் செய்யும்,,,
ஒடினோம்,,,

பனை மர நிழல் விலகி இருந்தது,,
மெல்ல,,மெல்ல,,
அவரை தூக்கி இருக்க வச்சு,,
அவரு வாயில,,பயினியைக் கொடுக்கையில,,,
பாதி பயினி,,,உடுப்புல வழிஞ்சது,,,

அந்த பயினி,, ஒரு வாய்,,
உள்ள போனதும்ம்,
அவர் அசைய ஆரம்பித்தார்.,,,
கண் திறந்தது,,

பெரியவ்றே,,
இன்னும்,,கொஞ்சம் குடியும்,,,

ஒரு மடக்குக் குடிச்சவரு,,

ஒங்களுக்கு,,,,

நீரு குடியும்,,முதல்ல,,,

மீண்டும்,,ஒரு மடக்கு குடிச்சுட்டு,,,,

போதும்,,மக்களே,,,,
நீங்க குடிங்க,,, மக்களே,,

யோவ்,,,
தாத்தா,,,நீரு குடியும்,,முதல்ல,,
இப்பத்தான்,,எங்களுக்கு மூச்சே வருது,,
நீரு விழுந்த உடனே தெகைச்சு போயிட்டோம்,,தெரியுமா,,,?

அதுசரி,,,
நீங்க,,, எங்க ஊருல,,,,யாரைத்தான் பாக்க வந்திய,,,?

ஒங்க பேரு,,
என்னா,,மக்கா,,

எம்பேரு,,,செவாண்டி,,,
அவம் பேரு,,,நடராசு,,,,,,,,,,,,


ஏ மக்கா,,,
செவனே,,,!
எஞ் சிவனே,,,,

நீ தான்,,,
என்னைக் காப்பாத்த ,,
இந்த மக்க சொரூபத்துல வந்தியா,,,,?


அந்த சிவன் தான்,,
அந்த செப்பறைச் சாமிதான்,,,
அந்த கூத்தன்,,
அழகிய கூத்தன் தான்,,,
என்னைய, உங்க சொரூபத்துல வந்து காப்பாத்தினான்,,,,,
சாமி,,,
மக்கா,,,,
இங்க வாங்க,,மக்கா,,,,

பெருசு,,,அரற்றினார்,,,
எங்களைப் பாத்துக் கும்பிட்டார்,,,,,

பெருசு,,
தோளிலிருந்த பையிலிருந்து பணமெடுத்து,,,
எங்க கையில,,, கொடுத்தாரு,,,

வேண்டாம்,,தாத்தா,,,,

வேண்டாம் பெருசு,,,

செப்பறை சாமியைத்தான்,,
கூத்தனைப் பாக்கப் போறேன்னு சொன்னியளா ?

நாங்க ஒங்க சொந்தாகாரவுளப் பாக்கப் போறீருன்னு நெனைச்சோம்,,,,

எப்பா,,,,செவாண்டி,,நடராசு,,,
நீங்க ரெண்டு பேரும்,,,,ஒன்னு சேர்ந்தா,,,,
அந்த செப்பறைச் சாமி தானய்யா,,,,,

பெரியவர்,,
கண்ணீர் மல்க,,,,
எங்களை அணைச்சபடியே,,,,,இருக்க,,,

தாத்தா,,வாரும்,,,
மெல்ல,,,
ராசவல்லி புரத்துல டாக்டரைப் பார்த்துட்டு,,
அப்படியே,,உங்க,,சாமியையும்,,செப்பறையில,,பாத்துட்டு வந்துடலாம்,,,,


வேண்டாமப்பா,,,
கூத்தனை,,
அந்த கூத்தனின் திருவிளையாடலை,,
இந்த
பனை மரச் சாலையிலேயே,,,பார்த்துட்டேன்,,,,,

போதும்,,,போதும்,,,
சாமிகளே,,,,

நாங்க,,
சாமியா ?,,
செவனாண்டி நான்,,நடராசுவைப் பாத்தேன்,,,

பெரியவர் பேசிக் கொண்டே இருந்தார்,,,
அந்த
வெயில் சாலையில்,,
நின்றிருந்த பனை மரங்களிலிருந்து,,,,
பனையோலைகள் அசையும்,,சத்தம்,,,
அவரின் பேச்சுக்கு
எசப்பாட்டு பாடிக் கொண்டிருந்தது,,,,,


தூரத்தே,,
செப்பறை
அழகிய கூத்தர் ஆலயத்து மணியோசை,,
காற்றில் மிதந்து வந்தது,,,





Tuesday, 11 June 2019

புறம் நூறு


புறம் நூறு




விளைகின்ற பயிர்மடங்கி, வேரெல்லாம் வான் நோக்க?
உளைகின்ற மனமடக்கி , வேந்தனே வா யென்வளம் நோக்க?
அழுகின்ற விழியடக்கி வேளாளன்  வாழ் நிலம் நோக்க ?.
உழுகின்ற கரமடக்கி வேலெடுக்கும், வேந்தன் முகம் நோக்க,

விழுகின்ற சருகடங்கி  வேழமது மெல்லத்தான் வயல் கடக்க ?
தொழுகின்ற கடவுளரின் கைவாளைத் தானெடுத்து தாய் கொடுக்க,
எழுகின்ற கதிர் வீச்சமென வாள் வீசி, வேழமுடன், புலி கொன்றான் !
அழுகின்ற மாதர்களின் விழிநீர்த் துடைத்த மகன் விண் சென்றான் !

தொழுகின்ற கடவுள் இனி , அவனே ! எனச்சொல்லி  அணைத்தபடி ,
ஆளுகின்ற வேந்தனவர், வீழ்ந்தவர்க்கு  நடுகல் நாட்டி,சிலைவைத்து
பழுக்கின்ற காய், கனிகள், படையலிட்டு வணங்கி , இனம் வீரத்தால்,
தளும்புகின்ற காட்சிக்கு சாட்சி சொல்வதன்றோ ? தமிழ் கண்ட புறம் நூறு!

Tuesday, 4 June 2019

காவிரிக் கரை மாதவியாள் குரல்



சித்திராபதியாள் யெனை அணைத்தாள்  ; தாயென்பதனால்
நித்திராபதியாள் யெனை அணைக்கவில்லை,;தனியென்பதனால்,
சித்திரைமதியாள் யெனைத் தகிக்கின்றாள் ; தளிரென்பதனால்,
உத்திராபதியாள் யெனைச் சுகித்திருக்க வருவாரெவரோ ?

மாடத்து விளக்கொளிரும், மையிட்ட விழியொளிரும்,
கூடத்து விளக்கணைத்து, மையிருட்டுப் பள்ளியறைப்
பாடத்து விளக்கமெல்லாம், மெய்கொண்டு விளங்கிடவே ?
ஓடத்து விளக்கணைத்து கொண்டுவந்த பொன் தருவாரெவரோ ?

மாசிலா குணங் கொண்டேன் ! மங்கை மாதவியாள்,தழுவிடவே
மாசாத்துவான் மகன் கொண்டேன் ! தங்கக் கொழுக்கொம்பெனவே!
காசிலா மனங் கொண்டோர் ? கட்டில் கணிகை என்க, கோவலனோ
மாசாத்தும் யென்மடிமஞ்சம் கண்டான் ! மாதவியென் மனசறிந்தவரவரே !

அன்றொருநாள் கோவலனொடு யான்வாழ்ந்த சுக வாழ்க்கையினை,
பட்டினத்தார் நோக்கட்டுமென கை கோர்த்து உலாவந்த கடற்கரையில்
பாட்டினைத்தான் யாழினிலே மீட்டிநிற்க, கானலென மறைந்திட்டான்?இன்றொருநாள் இப்படித்தான் ஆகுமென்றால் கானல்வரி வந்திருக்காதோ?

பரியகமும்,சிலம்பும்,சதங்கையும்,காற்சரியும்
பாடகமும் சிலிர்கின்ற கால்களிலே அணிந்ததெல்லாம்,
பரிவேந்தர் போற்றுகின்ற தலைக்கோலி ஆனதெல்லாம்,
பாண்டரங்கம் ஏறிநின்ற மாதவியாள் , மனங்கோணித் தவிப்பதற்கோ ?

காற்சிலம்பின் ஓசையிலே, காவிரியான் நகரதனை மயங்க வைத்தேன்
காற்சிலம்பிருக்குதிது போதுமென ,காவிரியைப் புறந்தள்ளி கண்ணகியை
காற்சிலம்புடனே சுமந்தபடி வைகை  கரையில் நடந்த மகன்,சிரமிழந்தான்
காற்சிலம்பால்எனக் கேட்டபின் வாழ்வது? மேகலையை சுமப்பதனாலன்றோ


காலையில் எழுந்து,
கடன்களை முடித்தவன்,
பசியென்று அரற்றினேன் ?

மோரில் கரைத்த பழையசோற்றினை,
மோட்டு வீட்டு ஆச்சி கொடுத்த,

பித்தளைக் கும்பாவில்,,,,
தளும்பியது  வெள்ளை நிலா  !

பித்தளைக் கும்பாவில்,
தளும்பிய வெள்ளை நிலாவில்,
ரோசாப் பூவாய் நான்கைந்து உள்ளிகள்,
பசுமைக் காட்டிய கருவேப்பிலைத்தளிர்கள் !
பச்சை மிளகாய் ,காரம் காட்டிட மிதந்தன, இரண்டு

துள்ளிப் பருகின கண்கள் !
அள்ளிப் பருகின கைகள் !
தள்ளிப் போயின இருபது ஆண்டுகள் ?

இருபது ஆண்டுகள் கடந்த நாளில்,
கருப்பது மாண்டுபோன தலையுடன்,
விருப்பது கொண்டு மோட்டு வீடு வந்தேன்.

பஞ்சுப் பொதியாய் நரைத்த தலையுடன்,
நெற்றியில் குங்குமப் பொட்டுடன்,
வாடாமல்லி மாலையுடன் , சுவாசமின்றி
படமாய்த் தொங்கினாள் !  ஆச்சி

நெஞ்சம் கனத்தது ! பிறந்தது சாவது ,,இயல்புதானே ?
கொஞ்சம் வலித்தது , தொண்டை வறண்டது,,
தொட்டில் கட்டி , கால் வீசி ஆடிய ஆச்சியின்
தொட்டுக் கட்டிய வீடு தாண்டி அடுக்களை புகுந்தேன் ,,,

அம்மான் இருந்தார் ! அத்தை இருந்தாள் !
அடுக்களை இல்லை ? கிச்சன் இருந்தது !
அள்ளிக் குடிக்க கஞ்சி இருக்குதா ? அத்தை
கிள்ளினாள் ! அத்தை,,பிள்ளைக் குறும்பு போகவில்லை ? என்றே

எனக்கு வேண்டும் ? வட்டிலில் நிலா !
நாக்குடன் பிணக்கும் பச்சைமிளகாய் ,
பழைய சோறு கரைத்த பித்தளைக் கும்பா வட்டில்,
நினைப்பில் வழிந்த கண்ணீரில் உப்புக் கரித்தது .

Monday, 3 June 2019

அவன் நடக்கின்றான் !



அவன் நடக்கின்றான் !
அவன்,
நடை அழகைக் காண்பதற்கு,,,
இரு விழிகள் போதுமோ?
அவன்,
மெய் கண்டு மயங்கியவர்,,,
அவன் கழலடியில் பணிகின்றார் !
அவன்,
மேனி கண்டு மயங்கியவர்,,, பலரிருக்க,,
அவன்
மேதினியில்,
மென்னகைத்து,
அகங்குளிர, புறந்தள்ளி,
மெல்லவே நடக்கின்றான்,,,
திருக்கச்சி

என் கரங்களில், பறவையொன்று,,

என்
கரங்களில்,,
பறவையொன்று,,,?
சிறகடிக்கிறாயா ?
சிறையிருக்கிறாயா ?
மெல்லக் கேட்டேன்,,,
சிறையிருக்கச் சம்மதம் !
மெல்லச் சொன்னது !
ஆள் பார்த்த,
ஆசையில் அடக்கமாய்ச் சொல்லாதே ?
சம்மதம் தானா ? உண்மையைச் சொல் ?
தினமொரு வட்டில் தானியம் !
தினமொரு குவளைத் தண்ணீர் !
வாரத்தில் இரு நாள் ஏதேனுமொரு கனி !
சாரத்தில் பிளாஸ்டிக் இல்லா கூண்டு ! போதும் !
வெந்த சோறு ?
மென்ற கறித் துண்டு ?
அழுகிய காய், கனி
புளித்த தயிர் ?
புழுக்கள் நெளியும் நீர் ?
வைத்து விடாதே ? மற்றவை பிறகு,,,
இப்போது ?
நானேன் ?மெளனச் சாமி ஆனேன் ?
மெல்ல,,மெல்ல,,,
விரல் பிரிக்கிறேன்,,,
சிறகை விரிக்காமல்,,,
சிரிக்கிறது பறவை !
சின்னப் பறவையின் தீனிக்கே
சிந்தை கலைகிறாய் ? பிள்ளாய்,,,
நீயா ?
உலகம் காக்கப் போராடப் போகிறாய் ?
போ ! போ !
கூலிக்கு மாரடி,,,
போலியாய் நடி,,,,
இப்போதும்,,
அந்தப் பறவை,,,
அங்கே தான் இருக்கிறது !
என்னைத் தான் காணவில்லை ?
கண்டோர் விண்டால்,,?
நலம்,,,
முகநூல் களம் காத்திருக்குதாம் ?

தகப்பன் சாமிகள் ! உணருமோ ?



இன்று எங்கள் கல்லூரியின்
2019 ;;; 2020 கல்வியாண்டிற்கான முதல் நாள் !
முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நிகழ்ச்சிகள் முடிந்து, கேண்டீனில் ,,,
ஒரு தந்தை,
தான் சாப்பிடாமல்,,,
தன் மகனுக்கு மட்டும் வெஜிடபிள் பிரியாணி வாங்கிக் கொடுத்து ,
மகன் சாப்பிடுகையில்,,,,,,
பக்கத்தில் உட்கார்ந்து
மகனையே பார்த்தபடி,,,
தம்பீ,,,
நல்லா படிக்கணும் டா,,,,
ம்ம்,,,
இந்த காலேஜ்ல சீட் கிடைக்கிறது எவ்வளவு கக்ஷ்டம் தெரியுமா ?
அதுக்கென்ன இப்ப ?
ஒன்னுமில்லடா,,,,
நல்லா படி,,,
நீ
நல்லா படிச்சாத்தான்,,,
நீயும்,,,அம்மா, தங்கச்சி, நாம எல்லோரும்,,நல்லா இருக்க முடியும் ?
ம்ம்,,சரி,,,
அதை வாயைத் தொறந்து தான் சொல்லேன் ராஜா,,
இப்படி தொண தொணன்னு பேசாம,,
சாப்பிட விடுறீயா ?,,,,
ம்ம்,,,
பெற்றவனின் கண்ணோரம் கண்ணீர்த் துளி நிறைக்கிறது,,,,,
மெல்ல முகம் திருப்பியபடி,,,
செல்போனில் முகம் திருப்புகிறார் .
இன்னும்,
மூன்றாண்டுகள்,,,, ?
அந்த தகப்பன்,,
இது போல்,,
இன்னும் எத்தனை கேள்விகளைச் சந்திக்கப் போகிறாரோ ?
இன்னும்,, எத்தனை மதியங்கள்,,
பட்டினி கிடக்கப் போகிறாரோ ?
எதிரே,,
உட்கார்ந்து தின்று கொண்டிருந்த,,
என் கண்களிலும்,,,
நீர்த் துளி,,
உப்புக் கரித்தது,,,,

Saturday, 1 June 2019

ஜீவாவின் ஜீவன்,,

     
ஜன சந்தடி அதிகமா இருக்கில்ல,,,,,,
எப்பத்தையும் விட,,,
இப்ப,,,
இன்னிக்கு கொஞ்சம்,,,
கொஞ்சமென்ன கொஞ்சம்,,? நிறையவே கூட்டம்,,,அதிகமா இருக்கு,,,?

 எப்பவும்,,இந்த ரோட்டுல,,கூட்டம்,,,அதிகமாத் தான் இருக்கும்,,
இன்னிக்கு,,,,
என்னாச்சு,,,?

நான் !
அமைதியாவே,,படுத்திருக்கேன்,,,
இல்லை,,
இல்லையில்ல,,,
எல்லாத்தையும்,,,நின்னு,,வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்,,,?

எப்பவும்,,
எம்மவனைத் தேடி நெறையப் பேரு வாங்க,,,
ஆனா,,இன்னிக்கு,,வர்றவங்க எல்லாம்,,,
ஜீவா,,ஜீவான்னு,,சொன்னபடியே,,,

எம் புள்ள,,,வழக்கம் போல,,,இல்லாம,,,
கொஞ்சம் பரிதவிப்போடத்தான் நிக்கான்,,,
என்னப்பா ? ஆச்சு,,,
கேட்க நெனைக்கேன்,,,,
வாய் அசையலை,,,
வாய் அசைஞ்சாத்தானே ? உதடும்,,நாக்கும்,,அசையும்,,,,!
உதடும்,,நாக்கும்,,அசைஞ்சாத்தானே ? மொழி பிறக்கும்,,,,?

ஆனால்,,,,
நான் படுத்திருக்கிற,,,
அந்த சின்ன அறையின் கதவில்,,,கட்டியிருந்த திரைச்சீலை அசைகிறது,,!

அது போதும்,,,
அவன் அசைகிறான்,,,
அவன் எம் புள்ள தான்,,,
அப்பவும்,,,
ஏதோ,,அவசர வேலை,,,?

அந்த மட்டுப்பா[ மாடி]க்கு போற படிக்கட்டுக்கு கீழே,,ஒரு சின்ன கண்ணாடி ரூம் மறைச்சு வைச்சி,,ஆபீஸ் ரூமா,,மாத்தி இருக்கான்,,,
அதுல உட்கார்ந்து,,ஏதோ மெயில் அனுப்பிட்டு இருக்கான்,,,
அவந்தொழில் அப்படி,,,,!
வேற எப்படி,,,? இருக்க முடியும்,,,,,

எப்பவும்,,,
அவசரம்,,அவசரம்,,,,
எங்கேயோ ? யாருக்கோ ?,,,
கால்ல வெந்நீயைக் கொட்டிட்ட மாதிரி,,,
ஏதோவொரு அவசரம்,,,, அதுக்கு,,,
இவனும்,,,,அவசரமா,,,பண்ணிட்டு இருக்கான் போல,,,,

அவன் ! 
வருகின்றான் ?
எம் புள்ளையோட தோழன் ,வேணு ! அவனும்,,எனக்கொரு புள்ளை தான்,,,

அவனின் கை பிடித்தபடி,,அழைத்து வருகின்றான்,,,
ஜீவா,,ஜீவா,,,என்று கண்ணாடி அறைக்கு வெளியிலிருந்து அழைக்கின்றான்,,

வந்தவனோ ? 
வேண்டாம்,,அவர்,,
அவர் வேலையைப் பார்க்கட்டும்,,என்று நெஞ்சணைத்த வலக்கையினை எடுக்காமலேயே,,,?
என் பக்கலில் வருகின்றான்,,,?

அம்மா !
என்கிறான்,,,அவன் குரல் எனக்கு நன்றாகக் கேட்கிறது,,,
அறைக்கு வெளியே,,,வேணு,,,
கண்ணாடிக் கதவினைத் தட்டி,,,,
எம் புள்ளையிடம்,,ஜீவா,,வேலுப்பிள்ளை என்கிறான்,,,

அடேய்,,,
நீதானா ?,,அவன்,,,!
என் குரல் கேட்டுதோ ?
மெல்லத் தலை அசைக்கிறான்,,,
ஏதோ முணுமுணுக்கிறான்,,, 

என்னப்பா ? சொல்லுற,,?

சொல்லலை,,பாடுறேன்,,,,

அட,,பட்டினத்தார் பாட்டுல்ல,,இது,,,,

ஆமாம்மா,,,

சரி,,,, அதுவேன்? இப்ப,,,

ஒன்னுமில்லம்மா,,,இன்னிக்கு ஏகாதசி,,,
நல்ல நாளும்மா,,,,,

அட,, நீதான,,,சிவபதம் அடைந்து விட்டாருன்னு,,,எழுதின,,,இப்ப,,,ஏகாதசி என்கிற,,,அப்படின்னா,,,வைகுந்தமா ?,,,,மெல்லச் சிரிக்கிறேன்,,

அவனும் கண்களைத் துடைத்தபடி மெல்ல வாய் பொத்துகிறான்,

என்னப்பு,,,
கைலாசம்,வைகுந்தம்,,ஏதோவொன்னு,,,
இந்த ரெண்டும் இல்லேன்னா
இருக்கவே இருக்கு,,பூலிங்கத்தான் திருவடி,,, அப்படித்தான,,,,

எதையும்,,,
நாம,,முடிவு பண்ணலை,,,எல்லாம்,,,
அவன் முடிவு,,,,

ஆமாந்தான,,,?
அப்படித்தான்,,,,
எல்லாம்,,
பூலிங்கத்தான் செயல்,,,
அப்படித்தான் நெனைக்கேன்,,,
என்ன,,,
நாஞ் சொல்லுகதைக் கே[ட்]க்கியா ?,,

கேட்கேன்ம்மா,,,

ம்ம்,,

நான்,,
நாஞ்சில் நாட்டு, பூதப்பாண்டியில தான் பொறந்தேன்,,,,
பூதப்பாண்டியன் என்கிற ராசா ஆண்டு அரசாட்சி செய்த பூமி,,,
ஊரைச் சுத்தி,,மரமும்,மலையும்,,,வயலும்,தோப்பும்,,
பூதலிங்க சாமி கோவிலும்,,,பழையாறும்,,,எல்லாம் வளமாகத் தான் இருந்தது!

ஆனா,,
என் ராசியோ ? என்னமோ ?
நான் பொறந்து ரெண்டு வருசத்துல,,என்னைப் பெத்தவ,,,மேல போயிட்டா,,,,?

அன்னிக்கு,,,
சபையில,,,உருமா கட்டுகதுக்கு மட்டுமில்ல,,,,
சாவுல , பொறந்த வூட்டு கோடி போடுறதுக்கும்,,,தாய் மாமன் வேணுங்கிறதை  அழுத்தமா சொல்லுக ஊருள்ளா,,,அப்புறமென்ன ? தாய்மாமனுங்க நாலு பேரும் சேர்ந்து வளர்த்த குமரி நானு,,,

கருவேப்பிலைக் கன்னு போலத்தான் பொத்திப் பொத்தி வளர்த்தாங்க,,,,
படிக்கனும்,,மேல,,மேலப் படிக்கணுமின்னு ரொம்ப ஆசையுண்டு,,,

 ஆனா,,அதெல்லாம் நடக்கலை,,,
அன்னிக்கு இருந்த காலகட்டத்துல,,,,
பொம்பளப் புள்ள தெரண்ட உடனே ,,அதான்,,பெரிய பொண்ணு ஆனவுடனே,,ஒருத்தங் கையில புடிச்சி கொடுத்துறது தானே ? வழக்கம்,,,

ஒருநாள் மூத்த மாமா வந்து சொன்னார்,,
ஏட்டி,,வேலம்,,,
உனக்கு கல்யாணம்,,,
மாப்பிளை,,நம்ம வேலாயுதம் தான்,,,

அவரா,,,
அவரும்,,நமக்குச் சொந்தம் தானே ?
இப்பக் கொஞ்ச நாளா,,இங்க காணலையே,,,எங்க இருக்காரோன்னு நெனைச்சதுண்டு,,,

ஆனா,,இதுக்குப் பேரு ? காதலா ?,,இல்லையில்லை,,,
குமரிகளை கரையேத்தணுமுன்னு,,நெனைக்கிறப்ப,,வீட்டுல நடக்கிற பேச்சுல,,,,எல்லாந்தானே ? உருளும்,,,,

மூத்த மாமன் தான் சொன்னா,,
வேலாயுதம்,,இப்ப கோயமுத்தூர்ல இருக்கானாம்,,,
இங்க,,கொஞ்சம் இளவட்ட பயலுகளோட சுத்திட்டு இருந்தவன் தான்,,,
பின்ன,,அவங் கை வசம்,,,ஒரு தொழில் உண்டுல்லா,,,
பய,,
ஆளைப் பாத்த மறு நிமிசம்,,அச்சு அசலா,,அப்படியே வரைஞ்சுருவான்,,,
அவன் கையில சரசுவதி இருக்கா,,,

என்ன சொல்லுக,,,,என்றபோது,,
அவகிட்ட போயி,,,என்னத்தை கேட்டுட்டு,,,
எல்லாம்,,உங்களுக்குத் தெரியாததா ?,,அத்தை கதவு மறைவில் இருந்தபடி குரல் கொடுத்தாள்,,,,,

கோயமுத்தூருல,,,
ராயல் தியேட்டர் இருக்கில்லா,,,,?
அந்த தியேட்டர் முதலாளி,,,தான்
இவனை விட மாட்டாங்கிறாராம்,,,
இவன் குணம்  அறிஞ்சு,,வேலையும் கொடுத்து,,பாதுகாப்பா இருக்காராம்,,,,
நம்மாளுக எவனும் செய்யாததை,,எங்கையோ ? கிழக்க இருக்கிற ஒரு மனுக்ஷன் செய்யுறான்னா ? அவங்க எல்லாம் கடவுளுக்கு சமமில்லா,,,

பின்ன,,அவனும்,,,
அவ்வளவு கெட்டிக் காரன்,,, சரியாட்டி,,,
என்னவொன்னு,,,இப்ப,,,அவன் சாமி கும்பிட மாட்டான்,,,?

ஈரோட்டுகாரர் கட்சியோ ?

அதெல்லாம் ஒன்னுமில்ல,,,
நம்மூரு ஜீவா இருக்காரில்ல,,,,அதான்,,
சொரி முத்து புள்ள,,,அவரு,,இப்ப,,ரொம்ப தீவிரமான கம்யூனிஸ்டுல்லா,,,

அவரு கூடவா,,இருக்காரு,,,

இல்லை,,இல்லையில்லை,,
அவரு எங்க இருக்காருன்னு,,அவருக்கே தெரியுமோ ? தெரியாதோன்னுல்லா,,,இருக்கு நெலைமை,,,
அவரு மேடையிலயெலாம் பேசுவாரு,,
இவன்,,அதெல்லாம்,, இல்லை,,,
கைவசம் தொழில் இருக்கு,,வேலத்தை கண்கலங்காமப் பாத்துக்குவான்,,,

நம்ம பூலிங்க சாமி கோவில் போத்திகிட்ட கேட்டேன்,,,,
வேலாயுதம்,வேலம்மாள்,,பேர் பொருத்தம் நல்லாயிருக்கு,,,
தாராளமா பண்ணுங்கோன்னு சொல்லிட்டார்,,,,
நீயென்ன சொல்லுக,,,

ஆமென்றும்,சொல்லாமல்,,
இல்லையென்றும், சொல்லாமல்,,
மெல்லத் தலையாட்டினேன்,,,,எல்லாம்,,அவன் விட்ட வழி,,,
அன்னிக்கு இருந்த கொமரிகளோட நெலமையும்,,அதுதான்,,,,

பட்டு வேட்டி,பட்டு சட்டையோட,,மாப்பிள்ளை வருவாருன்னு நெனைச்சேன்,,,
சாதரண வேட்டி சட்டையில,,வந்தார்,,,
ஊர் மெச்ச கல்யாணமும்,,நடந்தது,,,,,

கோயமுத்தூருக்கு பயணித்தோம்,,,,
பழையாத்தங்கரையிலேயே,,,வாழ்ந்த,,
எனக்கு,,,கோயமுத்தூர் மிரட்சியா இருந்துச்சு,,,

ஆமாம்,,
அவரோட,,நண்பர்கள்,,,தோழர்கள்,,
அவரு கூட வேலை செஞ்சவங்க,,,,எல்லாரும்,,எங்க இரண்டு பேர் மேல காட்டுன,,அன்பு,,எனக்குப் புதுசா,,இருந்துச்சு,,,

ஏட்டி,,
இங்க,,வாட்டீ,,போட்டீன்னு,,
சொன்ன  மக்க கூட இருந்து வாழ்ந்த,
  எனக்கு,,,இந்த கோயமுத்தூரோட,,,,
வாங்க,,நல்லா இருக்கீங்களா ?,, சாப்பிடுங்க,, என்கிற உபசரிப்புகளில்,,,,நான் கொஞ்சம் தலை நிமிர்ந்தேன்,,,

ஆஹா,,,
நாம,,நல்ல ஊருக்குத்தான் வந்திருக்கோம்,,,
நல்ல மனுசன் கூடத் தான் வாழ வந்திருக்கோம்,,,
இந்த மனுக்ஷன் தான்,,,
இனி,,
நமக்கு எல்லாம்,,, நான் புதிதானேன்,,,
பழையாத்தாங்கரை குணம்,,அப்பப்ப வந்து எட்டிப் பார்க்கும்,,,
ஆனாலும்,,
நான் சந்தோக்ஷமாக இருந்தேன்,

அதிலயும்,,,
அவரோட,,முதலாளி,,
கோயமுத்துரோட,,பெரிய தியேட்டரான ராயல் தியேட்டர்  முதலாளி,,, அவரு,,எம் புருக்ஷன்கிட்ட காட்டிய அன்பும்,பரிவும்,,,
எம் புருக்ஷனின் தொழில் நேர்த்தியும்,,,,,
என்னை சந்தோக்ஷத்தைக் கொண்டாட வச்சது,,,,

பொண்டாட்டி,,,
புருக்ஷனைச் சந்தோக்ஷமா வச்சுக்கிறது ? எப்படி ?,,
இந்த உலகத்துல,,
யாரும்,,யாருக்கும்,,வகுப்பெடுக்க முடியாது,,,
ஆனா,,
எல்லா ஆம்பளையும்,,,
சந்தோக்ஷமா இருந்தா,,,,
அவன் வீடும்,,சந்தோக்ஷமா இருக்கும்,,,

அங்க,,பழையாத்துல முங்கி நீச்சலடிச்சு குளிச்சவ,,,,
இங்க,,,
தண்ணியை புடிச்சு வச்சு தொட்டியில இருந்து மொண்டு, மொண்டு, குளிச்சேன் தான்,,,,
அந்த நாளில்
நான் குளிக்காமல் இருந்தேன்,,,,
அவர் !
என்னவர் முகத்தில்,,புன்னகை,,,,அழகாய்,,

நானும்,,
அவரும்,,பிறந்த ,
பூதப்பாண்டி மண்ணிலேயே,,
என் உசிரும்,,மீண்டும் பிறந்தது !,,,
என்ன பேரு வைக்கலாம்,,, ?
பூதலிங்க சாமி பேரு வைக்கலாமா ?
ஊருல,,பாதிப் பேரோட பேரு,,அது தானே ?
பப்னாதாசாமி பேரு,,வைக்கலாமா ?

அவரு,,,
என்னவர் ,,
சாமி பேரெல்லாம் வேண்டாம்,,,,
ஜீவானந்தன் !  தான் பேர் என்றார்,,

ம்ம்,,சரி,,

என்னட்டி சிரிக்க,,,

ஒன்னுமில்லே,,,

இப்பவும்,,,,நீங்க,,பப்னாதசாமி பேரு தான வச்சிருக்கிய,,,
அனந்தன்,,,
அது பப்னாதசாமி பேருல்லா,,,,

அடக் கோட்டிக்காரி,,என்றபடி,,கன்னம் தட்டிச் சென்றார்,,,,

நான்,,
என் ஜீவனை தாலாட்டலானேன்,,,,!

காலச் சக்கரம் மெல்லச் சுழன்றது,,
அதுவும்,,
சந்தோக்ஷமாகச் சுழன்றது,,,,

அடுத்தடுத்து,,
மீனா,
கல்யாண சுந்தரம்,
மனோன்மணி
ராமமூர்த்தி,
மணிகண்டன்,
ஆறு பிள்ளைகள் பிறந்தன,,,,,,

என்ன பார்க்க,,,?
கல்யாணசுந்தரம்,ராமமூர்த்தி,,
என்னுல்லாம் பேர் இருக்கேன்னு பாக்கையோ ?
அவரு,,கம்யூனிஸ்ட் கட்சியில இருந்ததோட விளைவு,,,,,பசங்க பேரிலயும்,,,
அந்த வாடை  அடிக்கி,,,அவ்வளவுதான்,,,

கடைக்குட்டிக்கு மட்டும்,,மணிகண்டன்னு,,,பேரு,,, ? என்கிறயோ ?
அது ஒரு காலம்,,,
கட்சி,
தோழர்,
கொடி,,
துண்டு,,
உண்டியலுன்னு,,,இருந்த மனுக்ஷன் தான்,,,

திடீர்ன்னு ஒரு நாள்,,,
சபரி மலைக்கு மாலை போட்டுட்டு வந்து நின்னார்,,,,

நானும் தெகைச்சுத்தான் போனேன்,,,
அப்பா ! பூலிங்கா,,,,
சந்தோக்ஷத்துல சிரிச்சேன்,,,

கக்ஷ்டத்துல தான்,,மனுக்ஷனுக்கு கடவுள் ஞாபகம் வருமுன்னு,,
நம்ம பெரியவங்க சும்மாவா  ? சொன்னாங்க,,,

மூத்தவன் தான்,,,
சினிமா,,சினிமான்னு இருப்பான்,,
அவனைச் சொல்லியும் குத்தமில்லே,,,
அவங்கப்பாவோட தொழிலும்,,அதுதானே,,,?

விதவிதமா ?
படம் வரைவாரு,,,,
எம்ஜிஆர், சிவாஜி,,ஜெமினி,,,
சாவித்திரி,,சரோஜாதேவி,ஜெயலலிதா,,,,
அப்புறம்ம்,,,
அப்பத்தான்,,
புதுசா வந்த,,
சிவக்குமார்ஜெயசங்கர்,,கமலஹாசன்,ரசினிகாந்த்,,

அப்புறமென்ன ?

எல்லாத் தியேட்டரிலும்,,,
என்னவர் வரைஞ்ச படங்கள் தான்,,தியேட்டர் வாசலில்,,,முகப்பில்,,,தோரணம் கட்டி நிற்கும்,,,,
சிலசமயம்,,,காசு,,அதிகம் புரளும்,,சிலசமயம்,,,கூட வேலை செய்யுறவங்களுக்குக் சம்பளம் கொடுக்கக் கூட,,காசிருக்காது,,,,
அலைவாரு,,
பார்க்க பாவமா ? இருக்கும்,,,
அந்த குணமும்,,கோவமும்,,,நம்ம தலையில தான் விடியும்,,,?

ஆனாலும்,,
நான் அசரவில்லை,,,
நான்,, அவரைத் தாங்கினேன்,,,
அவர் என்னையும்,,
என் குழந்தைகளையும் தாங்கினார்,,,,

சினி ஆர்ட்ஸ் வளர்ந்தது !
நாங்களும்,,,வளர்ந்தோம்,,,,

ராத்திரி,,
எத்தனை மணிநேரம்,லேட்டாகி
படமெல்லாம் வரைஞ்சிட்டு வந்து படுத்தாலும்,,,
காலையில்,,மீண்டும்,,டான் என்று எழுந்திருக்கிறதுக்கு முன்னாடியே,,
வாசல் தெளித்து,,ஒரு சின்ன கோலம் போட்டு வைத்தால்,,
வேலைக்குப் போகிற மனுசன் ,,
வாசல் கோலத்தைப் பார்த்ததும்,,,
கண்ணில் ஒரு புன்னகை பூக்கும்,,பார்,,
அதெல்லாம்,,பார்க்கக் கொடுத்து வைக்கணும் டா,,,,பிள்ளாய்


இதற்கிடையே,,
நாகர்கோவில்ல இருந்து,,,தம்பியண்ணன் !
என்னவருடன்,,ஒன்னா வேலை செய்தவர்,,,,அவருபொஞ்சாதி,,சாந்தமுங்கிற சாந்தகுமாரி,,,, என் பேச்சுத் தோழியானாள்,,
அவள் வீட்டுக் கதையும்,,
என் வீட்டுக் கதையும்,,,,பரிமாறிக் கொள்வோம்,,,,
பிறர் வீட்டைக் கெடுக்காத,,,
எல்லாக் கதைகளும்,,
புலம்பல்களும்,,
நம்மை நாமே ஆசுவாசப் படுத்திக்கும்,,என்கிற,,
என் நம்பிக்கை , இப்ப வரை வீண் போகலை,,,

ஒரு நாள்,,
நான் தான் ஆசையா ?
அவருகிட்ட கேட்டேன்,,,,
என்னையும்,,ஒரு படம் வரைஞ்சு கொடுங்கன்னு,,,,

ஏட்டி,,
அதான் ,,ஆறு படம் வரைஞ்சு,,,கொடுத்தாச்சுல்ல,,,,?
அத்தனையும்,,
உன் படம் தானே  ?
இன்னமும்,,உன் படம் வேணூமான்னு,,ஆனந்தமா சிரிச்சிட்டு,,
வாசலில் போட்டிருந்த கோலத்தை, மிதிக்காமல்,,
தாண்டிச் சென்றார்...

எனக்குத்தான் ஒன்னும் புரியலை,,
அதென்ன ஆறு படம்,,,
அப்பத்தான்,,சாந்தம்,,தம்பியண்ணன் பொஞ்சாதி சொன்னா,,
வேலம்மக்கா,,,
அவரு,,
எம் மருமக்கமாருகளை ,,
அதான்,,
உங்க புள்ளைகளைச் சொல்லிட்டுப் போறாருன்னு,,,

அடப் பாவி மனுக்ஷா !
இது,,
நாம வாழ்ந்த வாழ்க்கையில்லா,,,,

இரண்டு பொம்பளைப் பிள்ளைங்களுக்கும்,,நல்லபடியா,,,
கல்யாணமாச்சு,,,,


ஒரு நாள்,,,
அவர் ! என்னவர் !
சினி ஆர்ட்ஸ் ஓனர்,,,
திரைச்சீலை ஒவியமாய்,,,
அதான் படமாயிட்டார் ?
ஆமாம்,,
அப்ப,,
எனக்கு நாற்பத்தியாறு வயசு,,,
மூத்தவன் ஜீவா,,,சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரம்,,,

இனி,,என்ன செய்யப் போகிறோம்,,,?
ஏதும் தோணலை,,,,

ஆயிரம் வருக்ஷத்துக்கு,,முன்ன,,
நான் பொறந்த பூதப்பாண்டியை ஆண்ட ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்றழைக்கப்படும்,,, ராசா,,,போரில் இறந்த போது,,,
ராசாவோட பொண்டாட்டி,,


பல்சான்றீரே, பல்சான்றீரே,
செல்கெனச் செல்லாது, ஒழ்கென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சி பல்சான்றீரே,, 

என்று புறநானூறு  பாடியபடியே ,,,உடன் கட்டை ஏறினது மாதிரி,,,,
நாமும்,,
உடன்கட்டை ஏறிடலாமா ? என்று,,
எனக்கும் தான் தோன்றியது,,,,

ஆனால்,,,
ஆறு புள்ளைங்களுமில்லா,,,?
நடுத்தெருவில,,,நிக்கும்,,,?
இதுக்கா,,,?
பழையாத்தங்கரையிலிருந்து,,
நொய்யலாத்தங்கரைக்கு வந்தோம்,,,?
மனசு அல்லாடியது,,,

ஜீவா,,என்றேன்,,,,
கண்ணாடியைத் தாண்டியும்,,
அவன் கண்ணில்,,,கண்ணீர்த் தேங்கியிருந்தது,,,,,

அப்பாக்கு,
அதான் என்னவர்க்கு,,,
கொள்ளி கூட போட மாட்டேன்னுட்டான்,,,?
என்னடா ? இது,,
உறவுகள் புலம்பின,,
உலகத்தொழிலாளிகளே,,,ஒன்று படுங்கள் ?
உள்ளூர் தொழிலாளிகளே,,அடித்துச் சாவுங்கள்,,,!! என்கிற,,
இந்த திரு நாட்டோட,,,பொதுவுடமைச் சித்தாந்தம்,,,
சீனா,ரக்ஷ்யா,,என்கிற இரு வெளி நாடுகளின் கைகளில் சிக்கித் தவிப்பதை,,
இவனுக்கு யார் புரிய வைக்கப் போறா ?,,,,,
எல்லாத்துக்கும்,,காலம் பதில் சொல்லும்,,,
அதுவரை,,,,அமைதியாக இரு,,
எனக்குள்,,
என்னைத் தேற்றிக் கொண்டேன்,,,


ஒரு வாரங் கழிந்தது,,
என்னப்பா ?பண்ணலாம் என்றேன்,,

எல்லாம்,,பாத்துக்கலாம்,,,,
பாத்துக்கலாம்,,,

அவங்க அப்பா !
இருக்கிற வரை,,,
தான் செய்யுற இந்த படம் வரையுற தொழிலை,,
ஜீவா,,
கத்துக்கவும்,,கூடாது,,
இந்தத் தொழிலுக்கு வரவுங் கூடாதுன்னு,,,வைராக்கியமா ? இருந்தார்,,,
தாம் பிள்ளை,,
பெரிய வக்கிலா வரணும்,,
கோட்டும்,,,சூட்டும் போட்டு,,,சும்மா ஜம்முன்னு,,,,
நடக்கணும்,,,
அதை விட்டுட்டு,,

இந்த பெயிண்ட்டும்,,
பிரக்ஷுமாய்,,இருக்கக் கூடாதுன்னு,,நெனைச்சார்..

ஆனா,,,!
மேல,,,இருக்கிறவன்,,வேற மாதிரி நெனைச்சுட்டான்,,,?
வேறென்ன சொல்ல,,,,

ஜீவா,,
என் மூத்த புள்ள,,,,
தன் வயதினை மீறி,,,
சுமை சுமக்கப் பழகிக் கொண்டான்,,,,!
சட்டக் கல்லூரியில படிப்பையும், படிச்சு முடிச்சான்,,,

ஆம்,,,!
அவன்,,
அவங்க ,,,அப்பா இருக்கும் போதே,,,
அப்பாவுக்குத் தெரியாமல்,,,
பள்ளி, கல்லூரிகளில்,,எல்லாம்,,
ஓவியப் போட்டிகளில் எல்லாம் கலந்துட்டு பரிசு வாங்கிட்டு வருவான்,,,,
என்னவர் முறைப்பார்,,,,
அதையும்,,தாண்டி,,,,

அவங்க அப்பா,,இல்லாதப்ப,,,
சினி ஆர்ட்ஸின்,,, திரைச்சீலைகளில்,,,,ஓவியங்களில்,,
அவன் வண்ணக் கலவைகளை,,,,
காலத்திற்குத் தகுந்தாற் போல மாற்றிக் கொண்டிருந்தான்,,,,!

மிகப் பெரிய ஓவியங்களில்,,,
உடல்,கால்,கைகள் எல்லாம்,,,மற்றவர் வரைய,,,
முகம் மட்டும்,,,,,
என்னவர் வரைவார் !
என் ஜீவாவோ ?
அந்த முகங்களில்,,
வண்ணக் கலவைகளால்,,,,
அன்பினை,,,
ஆச்சரியத்தினை,,,
கண்ணீரை,,கோபத்தை ,
நவரசங்களையும்,,,
வெளிக் கொண்டு வந்தான்,,,!

முன்பொரு நாள்,,,
என் கல்யாணத்துக்கு முன்னால,,
என் தாய்மாமா சொன்னது போல,,,
என்னவர் கையில் மட்டுமல்ல,,,?
எம் புள்ள கையிலயும்,,சரஸ்வதி உட்கார்ந்துட்டு இருக்கா,,,!

அப்ப,,
அவன் நண்பர்கள்,,,
அவனையும் சேர்த்து,,
பஞ்ச பாண்டவர்களென,,ஐந்து பேர்,,,ஒன்றாக,,,, ஒற்றுமையா இருந்தாங்க,,,
அவங்க,,
வேணு என்கிற வேணுகோபால்,,,
மிகப்பெரிய தமிழ் குடும்பத்து கந்தசாமி,
வக்கில் பாலு என்கிற பாலசுப்பிரமணியன்
வக்கில் கோவிந்து,,,என்கிற கோவிந்த ராஜ்
இன்னிக்கும்,,அவங்க,,அப்படித்தான் இருக்காங்க,,,,
அப்படித்தான் இருக்கணும்,,,
அதெல்லாம் தான் ஆண்டவனோட கொடுப்பினை,,,

ஆறு புள்ளங்களைப் பெத்தேன்,,,,
அவங்க,,வளர்ச்சி என்பது மூத்தவனின் முதுகில் ஏறிற்று,,,

அவனுக்கு, கல்யாணமுன்னு முடிவு பண்ணி,,
நாஞ்சில் நாட்டுல பொண்ணும் பார்த்தாச்சு,,,
கல்யாணத்தன்னிக்கு,,பட்டு வேட்டி கட்டுடான்னு சொன்னா,,,?
அதெல்லாம்,,,ஆகாது,,,
நான் பொதுவுடமை வாதி,,,
எல்லாரும்,,எல்லாமும் பெற வேண்டும்,,,பட்டுகோட்டை மாதிரி,,
எங்க வூரு ஜீவா அண்ணாச்சி மாதிரி,,பேச ஆரம்பிச்சிட்டான்,,,

அட,,என்னடா இது,,
விதை ஒன்னு போட்டா,,,?
சுரை ஒன்னா முளைக்கும்,,,? எல்லாம்,,,
காலம் பதில் சொல்லும்,,,
நான் அமைதியாக இருந்தேன்,,,,
வெறும்,,கதர் வேட்டி, சட்டையுடன்,,,மணவறை எல்லாம் வேண்டாம்,,,
சீர்த்திருத்த திருமணம் என்றான்,,, ?

எல்லாம்,,,எதுவரை போகுமோ ?
அதுவரை விட்டுத்தான் பிடிப்போம் ?
வேறென்ன செய்ய,,? வேற வழியுமில்ல,,,,
ஆனா,,,
வந்த மருமக, தமிழரசி , தான் விக்கிச்சுப் போயிட்டா,,,,,
கொஞ்சம் கலங்கித்தான் போனாள்,,போல,,,,

அதுக்கப்புறம்,,
அவளும் தெளிவாயிட்டா,,,,

ஆனந்த் பொறந்தான்,,,
மருமகளும்,,ஆனந்தமானாள்,,,

இந்த நிலைமையில தான்,,
நெய்வேலியில,,,
எம் பொண்ணும்,,,மருமகனும்,,வண்டியில போகையில,,,விபத்தாகி,,,
அவளை,,அள்ளிட்டுத்தான் வந்தோம்,,,,
அதுவரை பெரிய ஹீரோ போல வலம் வந்த எம் புள்ள,,,
கொஞ்சம் நொறுங்க ஆரம்பிச்சான்,,,,
அப்ப பொறந்த பொண்ணுக்கு,,
தங்கச்சி பேரையே வச்சான்,,,
அவ போட்டோவை வீட்டுல வச்சு,,
நான் கும்பிட ஆரம்பிச்சேன்,,அவனும் தான்,,,
என் வீட்டுல,,எல்லோரும் தான்,,,

காலம்,,
நகர்ந்து கொண்டே இருந்தது,,,

இளையவன்,
அதற்கடுத்தவன்,,எல்லோரும்,,மெல்ல,,மெல்ல தலை நிமிர்ந்தார்கள்,,,

கடைக்குட்டி , மணிகண்டன் தான்,,,ரொம்ப சுட்டி,,,
விளையாட்டுத்தனமாப் படிச்சான்,,,
அவனுக்கு எல்லாமே ? விளையாட்டுத்தான்,,
ஆனா,,
ஒரு காரியத்துல,,இறங்கிட்டா,,,,
அதை முடிக்காம விட மாட்டான்,,,

திரைப்படக் கல்லுரியில் தான் படிக்கணுமின்னான்,,
ஜீவாவும்,வேணுவும் தான் , சேர்த்து விட்டார்கள்,,,,

என் கடைக்குட்டி செல்லமும்,,,,
எங்கையோ,,? தூரத்துல ,,இப்ப,,,,இருக்கான்,,,
இப்ப,,,
எனக்காக,,,இங்க வந்துட்டிருப்பான்,,,,
ஆனா,,
நான் மட்டும்,,
நானும்,அவரும்,,வாழ்ந்த,,இந்த வீட்டை விட்டு எங்கையும்,,வரலைன்னு சொல்லிட்டேன்,,,,

அதுவும்,,
மூத்தவன் கிட்ட இருந்து எங்க போகவும்,,என்னால முடியலை,,,
அவனும் சரி,,
வந்த மருமகளும்,,சரி,,
எப்பவாவது முகம் சுழிச்சுருவாங்களோன்னு பயந்திருக்கேன்,,ஆனா,,,
அப்படியெல்லாம்,,நடக்கலை,,,

இப்ப கொஞ்ச நாளா,,,
எனக்கு உடம்பு முடியலை,,,
வயசாச்சு,,,,
படுக்கையிலேயே,,கிடக்க முடியுமா ?

அதுலயும்,,
மாரிலே வலி,,,
அங்க தான் வலி உசிரு போகிற மாதிரி வலிக்கும்,,,
எனக்கு வலிக்கிற வலிக்கு,,
ஓங்கி குரலெடுத்துக் கத்தணுமுன்னு தோணும்,,,
அப்படிக் கத்தினா,,,,?

எம் புள்ளைக்கு வலிக்குமில்லா,,,,
அதான் மெளனமாயிட்டேன்,,,

காலையில எழுந்தரிச்சு,,,
வாசலில் கோலமிட்டு,,, பல்லு தேச்சு,,ரெண்டு திருநீறை எடுத்து பூசிட்டு நிக்கையில,,மருமக,,காப்பியோட,,,வந்து என் முன்னால் நீட்டுவா,,

நாம்,,
ஒன்னு,,செஞ்சா,,
உன்னை சுத்தி இருக்கிறவங்க,,
உனக்கு ஒன்பது செய்வாங்க,,,,! அதான் உலகம்,,

இப்ப நெனைச்சு பார்க்கேன்,,,,
ஆறு பிள்ளைகள் பெத்த வேலம்மாள் என்கிற நான்,,
பதி மூன்று பேரன் பேத்திகளைக் கொஞ்சிய நான்,,,,
அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைக் கொஞ்சுகிற நான்,,
ஒரு நிறைவான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறேன்,,,,

இப்ப ரெண்டு மூணு வருக்ஷமா,,,
நான் கொஞ்சம் வலியோடுதான் வாழ்ந்திருக்கேன்,,,
முன்னயெல்லாம்,,அடிக்கடி,,
அவரு வந்து சாப்பிட்டுட்டு போன மதிய வேளைகளில்,,,
ஒடி வருகிற,,
என் தோழி சாந்தமும்,,இப்ப,,வருவதில்லை,,,
அவளுக்கும்,,முடியவில்லை,,,
அப்பப்ப,,அவ பிள்ளைங்க,,வந்து என்னைப் பாத்திட்டுப் போகும்,,,

இவனுகளும்,,போயி,,அத்தையை ப் பாத்திட்டு வருவாங்க,,,,

இந்த வாரந்தான்,,நெனைச்சேன்,,,
நாம் ரொம்பத்தான்,,,பெத்த பிள்ளைகளைப் பாடாய்ப் படுத்தறமோ ?
நாம போகிற வேளை வந்தாச்சு,,,
இன்னமும்,,
இதைக் கட்டி இழுத்து பிடிச்சிட்டு நிற்கிறது சரியில்லை,,,?
போயிருவமா ?

ஒரு கல்யாணம்,,
காது குத்து, சீர்,, எதுக்கும்,,அவனையும் போக விடாம,,,,
யாரையும் போக விடாம,,,,எத்தனை நாளைக்கு,,இப்படியே இருப்பது,,,?
என் தோழி சாந்தத்தை நெனைச்சேன்,,

ஏட்டி சாந்தம் வர்றீயா ? போலாம் ,,

எக்கா,,,
உங்க பின்னால நான் வந்துருவேன் என்றாள்,,,

சிக்னல் கிடைத்து விட்டது,,,,!

இதுவரை
அனுபவிச்சது போதும்,,,
போதும்,,போதும்,,,
போதும் என்பதே பொன் செயும் மருந்து,,அப்படித்தானே ?

இனி,,பிறவாமலிருக்க வேண்டும் !
அதனை பூதலிங்கன் அருள வேண்டும் !
அப்படித்தானே ?

அதோ,,
பள்ளி வாசலின் ’’அஸர் ’’நேரத்து யாகூப் அழைக்கும் பாங்கு ஒலிக்கிறது,,,,,

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் ,
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் – 
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் - 
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – 
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் - 
ஹய்ய அலஸ்ஸலாஹ் – ஹய்ய அலஸ்ஸலாஹ் - 
ஹய்ய அலல்ஃபலாஹ் – ஹய்ய அலல்ஃபலாஹ் - 
அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – லா இலாஹ இல்லல்லாஹு - 

அதோ,,
அந்த மாதாக்கோவிலின் மாலை நேரத்து துதி ஆலாபனை எழுப்புதல் நடக்கிறது,,,

அதோ,,,
வெகு தூரத்தே,,,
கோவில் மணிச்சத்தமும்,,கேட்கிறது,,,,

பிறப்பில்லா,,இறப்பொன்று,, வேண்டுகின்றேன்,,,,

சிவகாமி உடனுறை பூதலிங்கா,,,!
என் பூதவுடல் மட்டும்,,இம்மண்ணில் விட்டுச் செல்கிறேன்,,,,
நான் இனி,
தென்றலாய்,,?
தேங்காய் உடைக்கையில் எழும் ஒலியாய் ?
என் பேரன், பேத்திகளைக் கொஞ்சுகையில் வருகிற முத்தத்தின் சப்தமாய்,,,
என் ஜீவா,,,
ஒவியம் தீட்டுகையில்,,,
வர்ணக் கலவைகளை உருவாக்குகையில் எழும் வாசமாய்,,,,
நான்,,
இனி இங்கே,, உலா வருவேன்,,,,


வருந்தே னிறந்தும் பிறந்து மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தே னாகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றி லாசையின்றி
யிருந்தே னினிச்சென் றிரவே னொருவரை யாதொன்றுமே,,





என்றோ படித்த பட்டினத்து செட்டியின் பாடல், என் காதில் ஒலிக்கிறது,,,
வருகிறேன்,,மெல்ல,,மெல்ல,,,


    நீங்கள்,,
என்னை அறிந்து,,
இனி,,
ஆகப் போவதொன்றிலை,,,,

நீங்கள்,,,
உங்கள் பாடுகளைப் பார்க்கையில்,,,,
உங்கள் பாடுகளில்,,என்றாவது துயரப்படுகையில்,,,
நான் உங்கள் பக்கலில் நிற்பேன்,,,,! ?

அதெப்படி என்கிறாயா ? பிள்ளாய்,,,

இல்லையம்மா,,

உன் விழி விரிகிறதடா ? பிள்ளாய்,,,
எப்படியாவது,,அவர்கள் பக்கலில்,,நான் நிற்க வேண்டுமடா,,,,,பிள்ளாய்,,,

நேற்று,,
என் பேத்தியோட பிள்ளை
 ’’இங்க எல்லாம் காமெடியா இருக்கும்மான்னு ‘’
சொன்னான் கேட்டியா ?
நீயும்,,எம் புள்ளையும்,,அவன் சொல்லும் போது,,கேட்டுட்டு இருந்ததை,,,
நானும் கேட்டேன்,,,,

ஒரு வகையில,,,
அந்த நாலு வயசுக் குழந்தை சொல்லுறது சரிதான்,,,போல,,,


அடேய்,,
பிள்ளாய்,,
நேற்று வீட்டிற்குள் வந்தாயே ? இன்றென்ன,,,
இங்கேயே,,,? அதுவும்,,,வீதியிலேயே நின்று விட்டாய் ?

அம்மா !
உங்கள் மீதும்,,
உங்கள் பிள்ளைகள் மீதும்,,அன்புள்ளவர்கள்,,எத்தனை பேர் பார்த்தீர்களா ? அதுவும் தவிர,,,
நீங்கள் வேறு,,,,வாசலில் நிற்கிறீர்கள்,,,?

நான் உங்களைப் பார்த்து விட்டேனம்மா !

என்னைப் பார்க்கிறாயா ? நிஜமாகவா ? பொய் சொல்லாதே,,

பிள்ளைகள் பொய் சொல்வதில்லையம்மா,,,,



ம்ம்ம்,, சரி,,வாசலில்,,,பார்த்தாயா ?

ம்ம்,,,,,பார்த்தேனம்மா,,,!

அது !
எம் புள்ள ஜீவா வரைஞ்சதாக்கும்,,,,,

உங்களவர்,,, ஒவியமாய்,,,இன்னமும்ம்,,
என் மனதினுள் நிற்கிறாரம்மா !

அப்ப,,!
ஓவியமாய்,,வரைஞ்சு வச்சா தான்,,,
மனசுல நிற்பாங்களா ?
அப்படின்னா,,,,,
எம் புள்ளைய,,,
ஜீவாவை,,
என்னையும்,,ஒவியமா,,வரையச் சொல்கிறாயா ?

உங்களைத்தான்,,,
விதவிதமா புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கிறார்களே ? அம்மா !

தம்பி,,!
அது,,போட்டோ,,
ஒவ்வொரு பேரன் பேத்திகள் கூட இருக்கிற மாதிரி,,,ஆயிரம் எடுக்கலாம்,,,
ஆனா,,
எம்
புள்ளை,,என்னை வரைஞ்சது மாதிரி இருக்குமா ?
அவங்க அப்பாவை வரைஞ்ச கையில,,,,
என்னையும்,,வரையணுமுன்னு,,
ஒரு ஆசை,,
எனக்குள்ள ஒடுதுடா,,,
என் ஆசையினைச் சொல்கிறாயா ?

சொல்வேன் !
கண்டிப்பாகச் சொல்வேனம்மா !

அதோ,,
என்னை வெளியே,ஐஸ் பெட்டியில் இருந்து வெளியில் எடுக்கிறார்கள்,,,?
என்னைக் குளிப்பாட்டி,,,
பொறந்த வூட்டு கோடு போட்டு,,,
என்னைத் தூக்குகிறார்கள்,,,
என்னை,,என் பேரன் தூக்குகிறானடா,,பிள்ளாய்,,,

கண்ணீர் துளிகள் சிதறுகின்றன,,,,
அழுகையொலி,,,
கேட்கிறதடா,,,?
வேண்டாம்,,அவர்களை அழ வேண்டாமென்று சொல்லடா,,,,?

இல்ல்லை அழட்டும்,,,

கிராதகா,,,,அழவேண்டாம் என்று சொல்லடா,,,?

என் பிள்ளை அழுகின்றான் !

அவர் தானே ? அழுகிறார் ,,,,அழட்டும்,,நன்றாக அழட்டும்,,,

பாதகா !
அவன் என் பிள்ளையடா,,,,
அவன்,,ஊரே மெச்சிய பிள்ளையடா,,,,!
அவன் ஜனாதிபதிகிட்ட விருது வங்கியவனடா !
அவன் கை விரல் அசைவிற்காக,,,எத்தனையோ ? அரசியல்வாதிகள்,,,,தன்னை வரைய மாட்டாரா ? என்று காத்திருக்கிறாளடா!

ஆனால்,,,,
தனக்கு,,
இது வேண்டும்   !
இது வேண்டாம் ? என்று கூடச் சொல்லத் தெரியாதவனடா ? என் பிள்ளை,,

என் கடைசி நாட்களில்ல்,
மலமும்,மூத்திரமுமாய்,,பெய்து,,
அறையெல்லாம்,,,வீடெல்லாம்,,,நாறுகையில் கூட,,
ஒரு முறை கூட முகஞ் சுளிக்காதவனடா,,,, என் பிள்ளை,,,,

’’காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !’’ 

என்ற பட்டினத்தார் போல,,,
என் பிள்ளையினைக் கா ! என்று எல்லாத் தெய்வங்களையும் வேண்டினேனடா,,,,

போதுமம்மா ! போதும்,,,!

அதோ,,,
உங்கள் பயணம் தொடங்கி விட்டது !

சாந்தம் வருகிறாளா ? பார்,,,,!

அதோ,,!
அவர்களும்,,புறப்பட்டு விட்டார்கள்,,,, அம்மா,,

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்,,,,
நீங்கள்,,,
இணைந்தீர்கள்,,,
இன்றிவ்வுலகில்,,,
இணை பிரியாத் தோழியராய் வாழ்ந்தீர்கள்,,,,
இப்பொழுதிலும்,,இணை பிரியாது செல்கிறீர்கள்,,,,

இனி,,
அவ்வுலகமும்,,
இவ்வுலகம் போல் இனியதாகுமம்மா,,,

இனி,,,
ஜீவா அண்ணா வீட்டில்,,,,
அவ்வப்போது வந்து செல்லும்,,,
இனிய நண்பர்களாய்,,,
காலை நேரத்து கோவில் மணியோசையாய்,,
பாங்கொலியாய்,,,,பூபாளமாய்,,, 
இதமான தென்றலாய்,,,,
எங்கள் புன்னகையில்,,
நீங்கள் வலம் வரு வீர்கள் ! அம்மா !,,,,,,,,,,,,,,,,,


’’முன்னை இட்ட தீ முப்புரத்திலே,
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்,
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே,,
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே ‘’ என்ற பட்டினத்துச் செட்டியின் பாடல்,,,,,,உங்கள் பிள்ளை,,,ஜீவா,,பாடவில்லை,,ஆனால்,,
நான் பாடுகின்றேன்,,,,
அதோ,,
உங்கள் பிள்ளை ஜீவா,,,மொட்டையடித்து,,,,
உங்கள் பிள்ளையாக,,,
உங்களுக்கான பிள்ளையாக,,,
விழி நீர் மறைக்க,,,,

பழையாற்றின் கரையில் பூதப்பாண்டியில் பிறந்து, 
நொய்யலாற்றின் கரையில் கோவையில் வாழ்ந்து,
அதோ,,அந்த பவானி ஆற்றில் சாம்பலாய்க் கரைந்து போனவள் !
இதோ,,
என் முன்,,,,,,,,!
அம்மா ! 


















܏