காலையில் எழுந்து,
கடன்களை முடித்தவன்,
பசியென்று அரற்றினேன் ?
மோரில் கரைத்த பழையசோற்றினை,
மோட்டு வீட்டு ஆச்சி கொடுத்த,
பித்தளைக் கும்பாவில்,,,,
தளும்பியது வெள்ளை நிலா !
பித்தளைக் கும்பாவில்,
தளும்பிய வெள்ளை நிலாவில்,
ரோசாப் பூவாய் நான்கைந்து உள்ளிகள்,
பசுமைக் காட்டிய கருவேப்பிலைத்தளிர்கள் !
பச்சை மிளகாய் ,காரம் காட்டிட மிதந்தன, இரண்டு
துள்ளிப் பருகின கண்கள் !
அள்ளிப் பருகின கைகள் !
தள்ளிப் போயின இருபது ஆண்டுகள் ?
இருபது ஆண்டுகள் கடந்த நாளில்,
கருப்பது மாண்டுபோன தலையுடன்,
விருப்பது கொண்டு மோட்டு வீடு வந்தேன்.
பஞ்சுப் பொதியாய் நரைத்த தலையுடன்,
நெற்றியில் குங்குமப் பொட்டுடன்,
வாடாமல்லி மாலையுடன் , சுவாசமின்றி
படமாய்த் தொங்கினாள் ! ஆச்சி
நெஞ்சம் கனத்தது ! பிறந்தது சாவது ,,இயல்புதானே ?
கொஞ்சம் வலித்தது , தொண்டை வறண்டது,,
தொட்டில் கட்டி , கால் வீசி ஆடிய ஆச்சியின்
தொட்டுக் கட்டிய வீடு தாண்டி அடுக்களை புகுந்தேன் ,,,
அம்மான் இருந்தார் ! அத்தை இருந்தாள் !
அடுக்களை இல்லை ? கிச்சன் இருந்தது !
அள்ளிக் குடிக்க கஞ்சி இருக்குதா ? அத்தை
கிள்ளினாள் ! அத்தை,,பிள்ளைக் குறும்பு போகவில்லை ? என்றே
எனக்கு வேண்டும் ? வட்டிலில் நிலா !
நாக்குடன் பிணக்கும் பச்சைமிளகாய் ,
பழைய சோறு கரைத்த பித்தளைக் கும்பா வட்டில்,
நினைப்பில் வழிந்த கண்ணீரில் உப்புக் கரித்தது .
No comments:
Post a Comment